கஸ்தூரி இராமலிங்கம்

கஸ்தூரி இராமலிங்கம்

மான்விழி எனும் கஸ்தூரி இராமலிங்கம் 2005ஆம் ஆண்டு முதல் மலேசியாவின் சோகூர் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதற்குமுன் சில ஆண்டுகள் சிங்கப்பூரில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் விற்பனை விரிவாக்கத்துறையில் பணியாற்றினார். 2000ஆம் ஆண்டு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துரையில் இளங்கலை பட்டம் பெற்றார்.

நாடகத்துறையில் அதிக ஆர்வம் உள்ள கஸ்தூரி, தமது பள்ளிக்குழந்தைகளுக்கு நாடகப் பயிற்சிகளை வழங்கி மாநில, தேசிய, பன்னாட்டு அரங்குகளில் பல சிறப்பான படைப்புகளை வழங்கியுள்ளார். 2018இல் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் நாடகப் போட்டி, 2020ஆம் ஆண்டு ஆங்காங்கில் நடைபெற்ற அனைத்துகல ஆங்கில நாடகப்போட்டி முதலான போட்டிகளில் கஸ்தூரியின் மாணவர்கள் முதல் நிலையில் வெற்றி பெற்றுள்ளனர்.

குழந்தைகளுக்கு மொழிக்கல்வி நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வம் காட்டி வருபவர் கஸ்தூரி. மழலைப்பள்ளி குழந்தைகள் தமிழ், ஆங்கிலம், மலாய் ஆகிய மொழிகளை விளையாடிக்கொண்டே கற்பதற்குப் பல பாடத்திட்டங்களைத் தமது சொந்த ஆர்வத்தின் பெயரில் அவர் உருவாக்கியுள்ளார். இந்தப் பட்டறிவைக் கொண்டு, 2016ஆம் ஆண்டு ‘எல்லோருக்கும் எளிய தமிழ்’ எனும் திட்டத்தை முத்து நெடுமாறனோடு சேர்ந்து உருவாக்கினார். முப்பதே நாட்களில் எளியமுறையில் தமிழ் எழுத்துகளை ஆறு வயது மழலைகள் கற்றுக்கொள்ளும் வகையில் இந்தத்திட்டத்தில் விளையாட்டுகள் அமைந்திருந்தன. இது குறித்து அதே ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டில் ஓர் ஆய்வுக்கட்டுரையைப் படைத்தார்.

இந்தத் திட்டத்தை மேலும் பல குழந்தைகளுக்கு எடுத்துச் செல்ல, இவரும் முத்து நெடுமாறனும் இணைந்து கனியும் மணியும் எனும் வரிசையில் பல குழந்தைகளுக்கானச் செயலிகளை உருவாக்கி வருகின்றனர். இந்தச் செயலிகளைக் கொண்டு மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமது முனைவர் பட்ட ஆய்வினைச் செய்து வருகிறார் கஸ்தூரி இராமலிங்கம்.