முத்து நெடுமாறன்

முத்து நெடுமாறன்

எழுத்துருவாக்கத்துறையில் 35 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டவர் முத்து நெடுமாறன். 1970-களில் பள்ளி நிகழ்ச்சிகளுக்காகப் பதாகைகளில் தமிழ் வடிவங்களையும் ஆங்கில வடிவங்களையும் வரைவதில் தொடங்கியது அவரது ஆர்வம். சில பத்தாண்டுகள் கடந்தபின் அவரது உருவாக்கங்கள் மின்னியல் கருவிகளில் இடம்பெற்றன. வெறும் புள்ளிகளைக் கொண்டே கணினித் திரைகளிலும் தொடக்ககால அச்சுப்பொறிகளிலும் தமிழ் வடிவங்களைக் கண்டார் முத்து நெடுமாறன். அனைத்து இந்திய இந்தோ-சீன மொழிகளுக்கும் அவர் உருவாக்கிய எழுத்துருக்கள் ஆப்பிளின் மெக் கணினிகளிலும், ஐபோன் ஐபேட் கையடக்கக் கருவிகளிலும், சில ஆண்டிராய்டு கருவிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளன. அமேசானின் கிண்டில் கருவியில் உள்ள தமிழ் மலையாள எழுத்துருக்கள் அவர் உருவாக்கியவையே. அவரின் இணைமதி என்னும் எழுத்துரு மலேசிய சிங்கப்பூர்க் கல்வி அமைச்சுகளில் பயன்படுத்தப்படும் அலுவல் முறை எழுத்துருவாகும். எழுத்துருவாக்கத்தைத் தவிர, உள்ளிடுமுறைகளிலும் முத்து நெடுமாறன் பல ஆண்டுகளாகச் செயலிகளை உருவாக்கி வந்துள்ளார். கணினிகளில் புகழ் பெற்ற முரசு அஞ்சல் செயலியும், கையடக்கக் கருவிகளில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களை அடைந்துள்ள செல்லினமும் அவரின் உருவாக்கங்களே.

2014ஆம் ஆண்டுமுதல் இவரும், மான்விழி எனும் கஸ்தூரி இராமலிங்கமும் இணைந்து ‘கனியும் மணியும்’ எனும் வரிசையில் குழந்தைகளுக்கானச் செயலிகளை உருவாக்கி வருகின்றனர்.